திருநாங்கூர் திவ்ய தேசங்களுள் ஒன்று. காவளம் என்றால் பூஞ்சோலை என்று பெயர். ஆயர்பாடியில் இருந்து கண்ணன் பூஞ்சோலைகள் நிறைந்த இத்தலத்திற்கு வந்து கோயில் கொண்டதால் 'திருக்காவளம்பாடி' என்ற பெயர் ஏற்பட்டது.
மூலவர் கோபாலகிருஷ்ணன், ராஜகோபாலன் என்னும் திருநாமங்களுடன் ருக்மணி, சத்யபாமாவுடன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயார் மடவரல் மங்கை என்றும், செங்கமல நாச்சியார் என்றும் வணங்கப்படுகின்றார். சேனைத்தலைவர், ருத்ரன் ஆகியோருக்கு பகவான் பிரத்யக்ஷம்.
தை மாதம் அமாவாசை தினத்திற்கு மறுநாள் நடக்கும் கருடசேவை மிக விசேஷம். திருமணிமாடக் கோயில் வாசலில் 11 திவ்யதேசப் பெருமாள்களும் கருட வாகனத்தில் எழுந்தருளி, அங்கு திருமங்கையாழ்வாருக்கும், அவரது பத்தினி குமுதவல்லிக்கும் மரியாதைகள் நடந்து பின்னர் வீதி புறப்பாடு நடக்கும் நிகழ்வு கண்கொள்ளாக் காட்சியாகும்.
திருமங்கையாழ்வார் அவதார ஸ்தலமான திருக்குறையலூர், மங்கை மடம் இத்தலத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது.
திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள் பாடியுள்ளார். இக்கோயில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|